Tuesday, August 9, 2022

உலர் திராட்சைகள் ஊக்கமளிக்கும்

 

உலர் திராட்சைகள் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சியின் மத்தியில் சாப்பிடக்கூடிய ஊக்க உணவாக பயன்படுத்துவது நன்மை பயக்கும் என்று ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு தேவை உடல் வலிமை. அதிலும் குறிப்பாக தொலை தூர ஓட்டப்பந்தயங்கள் போன்றவற்றில் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கத்தக்க உடல்வலிமை மிக மிக அவசியம். இப்படியான தாக்குப்பிடிக்கத் தக்க உடல்வலிமையை பெறுவதற்காக போட்டியாளர்கள் பலவகையான வழிமுறைகளை கடைபிடிப்பார்கள். கார்போஹைட்ரேட் அதிகமிருக்கும் செயற்கையான இனிப்பு மிட்டாய்களை மெல்வது போட்டியாளர்கள் பலரும் செய்யும் விடயம்.
ஆனால் அப்படியான செயற்கை இனிப்புக்களை மெல்வதை விட, இயற்கையான முறையிலேயே இப்படியான தாக்குப்பிடிக்கத்தக்க வலிமையை பெறமுடியும் என்று கலிபோர்னிய பல்கலைக்கழகத்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதாவது உலர் திராட்சைப்பழங்களை மென்று சாப்பிடுவதன் மூலம் விளயாட்டுப் போட்டிகளில் தேவைப்படும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கத்தக்க உடல் வலிமையை பெற முடியும் என்று இவர்கள் தங்கள் ஆய்வின் மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இதற்காக இவர்கள் செய்த ஆய்வுக்காக ஐந்து கிலோமீட்டர் தூர ஓட்டப்பந்தயத்தை நடத்தினார்கள். இதில் கலந்து கொண்டவர்களில் சிலர் வெறும் தண்ணீர் மட்டும் குடித்துவிட்டு ஓடினார்கள். வேறு சிலர் கார்போஹைட்ரேட் அதிகமிருக்கும் இனிப்புகளை சாப்பிட்டு ஓடினார்கள். மற்றவர்கள் உலர் திராட்சைப்பழங்களை சாப்பிட்டு விட்டு ஓடினார்கள்.
போட்டியின் இறுதியில் வெறும் தண்ணீர் குடித்துவிட்டு ஓடியவர்களை விட, இனிப்புகளையும் உலர் திராட்சைகளையும் சாப்பிட்டுவிட்டு ஓடியவர்கள் ஐந்து கிலோமீட்டர் தூரத்தை ஒரு நிமிட நேரம் முன்னதாக ஓடி முடித்தார்கள்.
இதிலிருந்து, கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கும் இனிப்புக்களுக்கு சமமாக உலர் திராட்சைகளும் நீடிக்கத்தக்க உடல் வலிமையை தருவதாக தெரிவித்திருக்கும் ஆய்வாளர்கள், உலர் திராட்சைகள், இயற்கையான ஊக்கசக்தியாக விளங்குவதாக தெரிவித்திருக்கிறார்கள்.
உலர் திராட்சைகளில் காணப்படும் அதிகமான பொட்டாஷியம் மற்றும் இரும்புசத்து, விளையாட்டு போட்டிகளுக்கு தேவைப்படும் நுண்ணிய சக்தியாக செயற்படுவதால் இவை போட்டியாளர்களுக்கு இயற்கையான ஊக்கமருந்தாக பயன்படுவதாகவும், செயற்கையான இனிப்புகளில் இருக்கும் கூடுதல் சர்க்கரை இதில் இல்லாமலிருப்பது கூடுதல் நன்மை பயக்கும் என்கிறார் சென்னையைச் சேர்ந்த உணவியல் நிபுணர் கவுசல்யாநாதன்.
உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் பல நிறைந்துள்ளன. இந்த உலர் திராட்சையில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோஸ் நிறைந்துள்ளன. விட்டமின்களும், அமினோ அமிலங்களும் உடலுக்கு நல்ல சக்தியை அளிக்கின்றன. மேலும் பொட்டாசியமும், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது.
மேலும் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் தொடர்ந்து உலர் திராட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமாகும். இதில் உள்ள தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். மஞ்சள் காமாலை உள்ளவர்கள் தினமும் இருவேளை உலர் திராட்சையைச் சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும்.
உலர் திராட்சை பழத்தில் 50 பழங்களை எடுத்து பசும்பாலில் போட்டு காய்ச்சி ஆற வைத்து, பழத்தை சாப்பிட்டு விட்டு பாலைக் குடித்தால் காலையில் மலச்சிக்கல் பிரச்சினை சரியாகும். உலர் திராட்சையில் உள்ள கால்சியத் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
குழந்தைக்கு பால் காய்ச்சும் போது அதில் இரண்டு பழத்தை உடைத்துப் போட்டு காய்ச்சிய பின் பாலை வடிகட்டிக் கொடுத்தால் தேக புஷ்டி உண்டாகும். குழந்தைகள் நல்ல ஆரோக்கியமாக வளருவார்கள். தொண்டைக்கட்டு பிரச்சினையை தீர்க்கும். மூல நோய் உள்ளவர்கள் தினசரி உணவுக்குப் பின்னர் காலையிலும், மாலையிலும் 25 உலர் திராட்சைப் பழங்களைத் தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குணம் பெறலாம்.

No comments:

Post a Comment

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...