Friday, October 16, 2015

மீதமாகும் உணவை வீணாக்காதீர்கள்

இன்று (வெள்ளிக்கிழமை) உலக உணவு தினம். உலக உணவுதினம் என்பது ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 16-ந்தேதி கொண்டாடப்படுகின்றது. உணவு, உழவு இவற்றுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஐ.நா. சபையால் இது கொண்டாடப்படுகின்றது. உணவு பாதுகாப்பு, உலக உணவு, உலக உழவு முன்னேற்றம் போன்ற பன்னாட்டு நிறுவனங்களும் சேர்ந்து இதனைக் கொண்டாடுகின்றன.

சுமார் 150 நாடுகளில் கொண்டாடப்படும் இந்நிகழ்ச்சியின் மூலக் கருத்து உலகில் வறுமையையும், பசியையும் நீக்க வேண்டும் என்பதுதான்.இதன் அடிப்படை நோக்கம் ஒவ்வொரு தனி நபருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதே.

ஏன் மனிதனின் பசியைப் பற்றி கவலை கொள்ள வேண்டும்? உலக மக்கள் தொகையில் ஒன்பது நபரில் ஒருவர் உணவின்றி இருக்கின்றார் என ஆய்வுகள் கூறுகின்றன.

* உலகில் பசியோடு இருப்பவர்களில் 60 சதவீதம் பேர் பெண்கள்.

* 5 வயதிற்கு கீழ் இருக்கும் 50 லட்சம் குழந்தைகள் பசியால் இறக்கின்றனர்.

* ஏழை நாடுகளில் 10-ல் 4 குழந்தைகள் உணவு பற்றாக்குறையினால் உடல், மூளை பாதித்து உள்ளனர்.

* பசி என்பதனை உலகில் இல்லாமல் செய்து விட முடியுமா? முடியும் என்பதே இதன் கொள்கை. பல உலக தலைவர்கள் இதற்காக கையெழுத்து ஒப்பந்தம் செய்துள்ளனர்.

* கடந்த இருபது வருடங்களில் ஐந்து வயதுக்கு கீழ் பசியினால் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது.

* 1990-ல் இருந்து கடும் வறுமை பாதியாகக் குறைந்து விட்டது. பசியுடையோருக்கு படிப்பது எப்படி முடியும்? வேலையை எப்படி கவனமாய் செய்ய முடியும். ஆகவேதான் உலக உணவு தினம் பசியே இல்லாத சமுதாயத்தினை உருவாக்கும் தினமாக செயல்படுகின்றது.

* உலகத்தில் உள்ள மக்களின் பசியினைப் பற்றி மேலும் அறியுங்கள்.

* இந்தியாவில் பசியுள்ளோரை பற்றி அறியுங்கள்.

* உங்கள் மாநிலம், ஊர், தெரு இவற்றில் பசியுள்ளோரை பற்றி அறியுங்கள்.

உலகில் அனைவருக்கும் தேவையான உணவு உள்ளது. ஆனால் அது கிடைப்பதில்லை.

ஆகவேதான் நம் முன்னோர் தானத்தில் சிறந்தது அன்னதானம் என்றனர். ‘கைப்பிடி அரிசி’ தினமும் ஏழைகளுக்கு இடுங்கள் என பரமாச்சாரியார் அவர்கள் கூறினார்கள்.

மதிய உணவு திட்டம், பால் வாடி இவைகள் பசி, வறுமையினை கருத்தில் கொண்டே ஆரம்பிக்கப்பட்டது. ஏனெனில் பசியோடு இருப்பவர்களில் 1/3 பங்கு சிறு குழந்தைகளே என்ற கொடுமையை தாங்க முடியாது பசியின் கொடுமை பெருக ஆரம்பித்தால் இந்த உலகில் யாருமே அமைதியுடனோ நிம்மதியுடனோ வாழ முடியாது என்பதனை ஆய்வாளர்கள் அனைவருமே கூறுகின்றனர்.

இந்தியாவில் குழந்தைகளும் சத்துணவும் 50 வருடங்களுக்கு மேலாக கடும் முயற்சியின் காரணமாக நம் நாட்டில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும்.

* 34.3 சதவீத குழந்தைகள் சரியான வளர்ச்சி இல்லாமல் இருக்கின்றனர்.

* ஐந்தில் இரண்டு குழந்தைகள் எடை குறைவாக இருக்கின்றனர்.

* 50 சதவீத மேலாக இரத்த சோகை உடையவராக இருக்கின்றனர்.

உலகில் சத்தில்லாத குழந்தைகள் கணக்கில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள் என்கின்றனர். இதனால் இவர்கள் புத்தி கூர்மை குறைந்தவர்களாகி விடுகின்றனர். இவர்களுக்கு வேலை வாய்ப்புகளும் நன்கு கிடைக்காது. இவர்கள் உடல் நிலை மேலும் பாதிக்கப்படுவதால் எளிதாக பல நோய்கள் பாதிக்கின்றன.

இந்தியாவின் ஜனத் தொகை மிக அதிகரித்து வரும் இக்காலத்தில் இந்தியாவில் உணவு பற்றாகுறை வரும் காலங்களில் கூடலாம். 78 பசியுடைய நாடுகளில் இந்தியா 63-வது இடத்தில் இருக்கின்றது. உலகின் ஆரோக்கியமாகவும், சக்தியில்லாத குழந்தைகளில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியாவில் இருக்கின்றனர் என்கின்றனர்.

யூனிசெப் நிறுவன ஆய்வின்படி 47 சதவீதம் இந்திய குழந்தைகள் எடை குறைவாகவே இருக்கின்றனர். மூன்று வயதிற்குட்பட்ட 46 சதவீதம் குழந்தைகள் மிகவும் சிறியவர்களாக இருக்கின்றனர்.

விவசாய முன்னேற்றம் மிக நன்றாகவே முன்னேறி உள்ளது. முறையான சேகரிப்பு பராமரிப்பு இல்லாததால் நிறைய உணவுப் பொருட்கள் வீணாகின்றன. இந்தியா தான் உலகில் பால் உற்பத்தியில் முன்னணியில் இருக்கின்றது. மிக அதிக அளவில் காய்கறி, பழம் உற்பத்தி செய்கின்றோம்.

இந்தியாவில் குடும்பங்களிலும், பராமரிப்புன்மையிலும் வீணாகும் உணவினை கொண்டு இந்தியாவில் 200 மில்லியன் மக்கள் பசியின் தீர்த்து விடலாம் என்கின்றார்கள். கல்யாணம், விழாக்கள் இவைகளில் ஆடம்பரம் என்ற பெயரில் அதிகம் வீணாக்குகின்றனர்.

பல லட்சம் மக்கள் பசியோடு இரவு தூங்கச் செல்கின்றனர் என்பது வேதனையான உண்மை. பலர் ஒருவேளை உணவு மட்டுமே பெறுகின்றனர்.

ஆனால் 40 சதவீதம் உணவு ஏதோ ஒரு காரணத்தினால் வீணாவதாக ஆய்வுகள் கூறுவது ஒவ்வொரு தனி மனித பொறுப்பினை வலியுறுத்துகின்றது. உணவு வங்கி என்று கூட வெளிநாடுகளில் ஆரம்பித்து உணவில்லாதோருக்கு உணவளிக்கின்றனர்.

2004-2005ல் 407 மில்லியன் மக்கள் இந்தியாவில் வறுமை கோட்டுக்கு கீழே இருப்பதாக கூறப்பட்டது.

2011-12ல் 270 மில்லியன் மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பதாக ஆய்வுகள் குறிப்பிட்டது. 137மில்லியன் மக்கள் தொகை வறுமைப் பிடியிலிருந்து விடுபட்டது மகிழ்ச்சியான செய்தியே.

உணவு வீணாவதினை ஒவ்வொரு தனி மனிதனும் எவ்வாறு தவிர்க்க வேண்டும்.

* எவ்வளவு தேவையோ அவ்வளவே வாங்குங்கள்.

* சிறிய பைகளை எடுத்துச் செல்லுங்கள்.

* பழம், காய்களை சுத்தமான பிரிஜ்சில் பாதுகாத்து வையுங்கள்.

* அதிக குளிர்ச்சி கொண்ட பிரிஜ் அறையில் பாதுகாப்பாக வைக்க வேண்டிய உணவுப் பொருட்களை வையுங்கள்.

* மீந்த நல்ல உணவுகளை தூக்கி எரியாதீர்கள். உணவு இல்லாத ஏழை-எளியவர்களுக்கு மனம் உவந்து கொடுங்கள்.

* உங்கள் குழந்தைகளுக்கு பசியால் வாடுபவர் பற்றி சொல்லி உதவும் மனப்பான்மையோடு வளருங்கள்.

தானியங்கள் அறுவடை இன்றி வீணாவதை தவிர்க்க வேண்டும். அறுவடைக்குப் பின் பதப்படுத்துதலில் வீணாவதை தவிர்க்க வேண்டும். அதிக உற்பத்தி உபயோகஏப்படாவிடின் அதுவும் வீணே.

பொருட்கள் அழுகி, வீணாகாமல் தவிர்க்க வேண்டும். உணவினை பசியுள்ளோருக்கு கொண்டு செல்வதே உணவு வங்கியின் குறிக்கோள்.

நீங்களே உங்கள் தெருவில் இதனை ஆரம்பித்து சுகாதார முறையில் பசியுள்ளோருக்கு அளிக்கலாம்.

உணவு இறைவன் உயிரினங்களுக்கு கொடுத்த வரப்பிரசாதம். உலகின் கொடியது பசி. அதுவும் ஒளவையார் கூறியது போல இளமையில் வறுமையும், பசியும் மிகக் கொடியது. இப்படி ஒரு சூழ்நிலை வர நாம் ஒவ்வொருவரும் காரணமே.

கல்யாண விழாக்களில் கண்டிபாய் ஆடம்பரத்தினை தவிருங்கள். பக்கத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களில் அன்று உணவளியுங்கள். உணவு கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் ஆவர். இந்த ஒரு நல்ல காரியத்தினை நாம் இன்றே ஆரம்பிப்போம்.

No comments:

Post a Comment

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...