Friday, September 26, 2014

வாழ்வை அழகாக்கும் அன்பான பார்வை

தம்பதிக்குள் பிரச்சனை வரும் போது, இருவருக்குமான பேச்சுவார்த்தை பலப்படுத்தப்பட வேண்டும். கோபப்படாத, வன்முறையில்லாத பேச்சுவார்த்தை அவசியம்தான். பிறவியிலிருந்தே, நமக்கெல்லாம் ஒரு குணம் உண்டு. யாராவது நம்மைத் திட்டினாலோ, தாக்கிப் பேசினாலோ, உடனே அதை எதிர்ப்போம்.

அவர்கள் சொல்வது சரியா, தவறா என ஆராய்கிற மனப்பக்குவம் கூட நமக்கு இருக்காது. இதே அணுகுமுறைதான் கணவன் - மனைவிக்கு இடையிலும் நடக்கிறது. கணவன் - மனைவிக்கிடையிலான பிரச்சனைகளின் போது, எப்போதும் எதிராளியின் மீதுதான் தவறு, நாம் செய்தது சரி என்கிற எண்ணம் அழுத்தமாகவே இருக்கும்.

நடந்த தவறில் நம் பங்கு என்ன என யோசிக்க மாட்டோம். அன்பு நடவடிக்கைகளில் இறங்குவதே முதல் தீர்வு. ‘அன்பாக இருங்கள்’ என்று சொன்னால், உடனே, ‘நான் அன்பாத்தான் இருக்கேன். என் கணவர் (அ) மனைவிக்குத்தான் என்னிடம் அன்பே இல்லை’ என்பார்கள் பலரும்.

அன்பு நடவடிக்கைகளில் இறங்குவது எனத் தீர்மானித்து விட்டால், இருவருமே அப்படித்தான் இருக்க வேண்டும் என அவசியமில்லை. அன்பை மட்டுமே கொடுப்பது என்பதில் இருவரில் ஒருவர் தீர்மானமாக இருந்தால்கூட போதும். அன்பு நடவடிக்கைகள் உங்களை பக்குவமான நபராக மாற்றும்.

‘என்ன நடந்தாலும், யார் என்ன சொன்னாலும் அன்புப் பாதைதான் என்னுடையது’ என்பதில் முதலில் மன உறுதி வேண்டும். அன்பாக இருந்து பழகுங்கள். அத்தனை நாள் தனிப்பட்ட நபராக உணர்ந்த நீங்கள், உலகத்துடன் நெருக்கமாகி, இணக்கமான மாதிரி உணர்வீர்கள்.

அத்தனை நாள் பயத்துடன் வாழ்ந்த நீங்கள், இனி காதலுடன் வாழத் தொடங்குவீர்கள். பதற்றமும் கோபமும் ஆக்கிரமித்திருந்த உங்கள் வாழ்க்கையை அன்பு என்கிற மென்மையான, ஆற்றல் மிக்க சக்தி ஆட்கொள்வதை உணர்வீர்கள். எப்போதும் ஆரவாரத்தில் அலைபாய்கிற உங்கள் மனதில் அமைதி ஐக்கியமாகும்.

திருமணத்தில் தொடங்குகிற பந்தமானது அன்பு, காதல், பாசம் சம்பந்தப்பட்டது. அன்பை எப்படிக் கொடுப்பது, எப்படிப் பெறுவது என்பதைப் பொறுத்தது. அன்பைப் பகிர்வது உங்களுக்கு ஒருவழிப் பாதையாக இருக்கலாம். ஆரம்பத்தில் அதனால் எந்தப் பலனும் இல்லாதது போல உணரலாம்.

அதற்காகத் தளர்ந்துவிடாமல், தொடர்ந்து உங்கள் அன்பைக் கொடுத்துக் கொண்டே இருங்கள். அன்பைப் பகிர்வதே அன்பளிப்பைப் பெறுவதற்கு இணையானது என்பதை அந்த அன்பே உங்களுக்கு உணர்த்தும். அன்பாக இருக்கப் போகிற உங்கள் உறுதிமொழியில் யாருடைய வற்புறுத்தலும் கட்டாயமும் இருக்கப் போவதில்லை.

அது முழுக்க முழுக்க உங்கள் விருப்பம் என்பதால், அதன் விளைவாக உங்களுக்கும், உங்கள் துணைக்கும் இடையிலான அன்யோன்யம் அதிகரிக்கும். அன்புடன் இருப்பதென்பது அத்தனை சுலபமானதும் அல்ல. அன்புப் பாதையை உங்களுடையதாக்கிக் கொண்டால், யாரைப் பற்றியும் உங்களுக்கு மதிப்பீடுகள் இருக்கக் கூடாது.

துணையை அப்படியே ஏற்றுக் கொள்கிற மனோபாவம் வேண்டும். தவறு செய்தவர்களை மன்னிக்கிற மனப் பக்குவம் வேண்டும். அந்த சோதனைச் சாலையில் கிடைக்கிற அனுபவங்கள் உங்கள் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றி விடும். முற்றிலும் மாறுபட்ட வேறு உலகத்துக்கு உங்களை அழைத்துச் செல்லும்.

No comments:

Post a Comment

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...