Thursday, May 29, 2014

ரசாயனகல் மாம்பழங்களால் புற்றுநோய் ஆபத்து

தற்போது மாம்பழ சீசனையொட்டி சென்னைக்கு மாம்பழம் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதையடுத்து கார்பைட் எனப்படும் ரசாயன கற்கள் மூலம் மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனைக்கு அனுப்புவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.

உணவு பாதுகாப்பு மாவட்ட நியமண அதிகாரி லட்சுமி நாராயணன் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் கோயம்பேட்டில் உள்ள மாம்பழ குடோன்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ரசாயனம் மூலம் பழுக்க வைத்த 500 கிலோ மாம்பழம் பறிமுதல் செய்யப்பட்டது.

கொத்தவால்சாவடி, தியாகராயநகர் மார்க்கெட்டுகளில் நடந்த சோதனையில் 1100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவைகள் அனைத்தும் அழிக்கப்பட்டன. இதுகுறித்து உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அதிகாரி லட்சுமிநாராயணன் கூறியதாவது:–மாம்பழம் இயற்கையாக பழுக்க 12 முதல் 15 நாட்கள் ஆகும். செயற்கையாக பழுக்க வைக்க 2 நாட்களே போதும். இதற்காக வியாபாரிகள் கார்பைடு ரசாயன கற்களை பழக்கூடையின் கீழே வைக்கின்றனர். இக்கற்களில் இருந்து அசிட்டிலீன் வாயு வெளியேறுகிறது. இதனால் காய்கள் சீக்கிரம் பழமானதுபோல் காட்சி அளிக்கின்றன. ஆனால் பழத்தின் நீர்சத்து உறிஞ்சப்பட்டு உள்ளே வறட்சியாக காணப்படும்.

இதை சாப்பிடுவதால் வயிற்றுக் போக்கு, வாந்தி, தீராத தலைவலி, மயக்கம் வரும். கார்பைடு கற்களில் இருந்து புற்றுநோயை உருவாக்கும் ஆர்சனிக் என்ற வேதிப்பொருள் பழத்தை சுற்றி படர்ந்து விடும். இதை சாப்பிடுவதால் புற்றுநோய் பாதிப்பு வர வாய்ப்பு உள்ளது.

குறைந்த விலையில் கிடைக்கிறது என செயற்கையாக பழுக்க வைத்த மாம் பழங்களை வாங்கி சாப்பிடாமல் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும் வியாபாரிகளுக்கு இதை வலியுறுத்தி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரசாயன கல் மூலம் செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழங்களை கண்டுபிடிப்பது எப்படி என்பது பற்றி கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த மாம்பழ வியாபாரி முருகேசன் கூறியதாவது:–

ரசாயன கல் வைக்கும் போது மாம்பழங்கள் எல்லா பகுதியிலும் ஒரேபோல பழுத்திருக்காது. ஒருபுறம் சரியாக பழக்காமல் பச்சை நிறத்துடனோ, முழுமையாக மஞ்சள் நிறம் மாறாமலோ காணப்படும். மாம்பழங்களை மரத்தில் இருந்து பறிக்கும்போது நன்கு பழுத்து, காயாக இருப்பது, பிஞ்சு உள்ளிட்ட அனைத்தையும் பறித்து விற்பனைக்கு அனுப்புகிறார்கள். அதை ரசாயனங்கள் மூலம் பழுக்க வைக்கும்போது வெளித்தோற்றம் மட்டுமே பழுத்தது போல் தெரியும். ஆனால் உள்புறம் சரியாக பழுத்திருக்கிறது.

மேலும் ரசாயன கல் வைத்த மாம்பழங்களை சாப்பிடும்போது பழம் இனிப்பாக இருக்காது. புளிப்பாக இருக்கும். சாப்பிட்டதும் வயிறு உபாதைகள் தோன்றும். இதை வைத்தே அது கல்வைத்த பழம் என்று கண்டுபிடித்து விடலாம். இந்த பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது புற்றுநோய் ஆபத்து உள்ளது. எனவே மாம்பழ சீசனில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

நாங்கள் மின்மினி மாம்பழம் என்ற பெயரில் இயற்கையாக பழுத்த பழங்களை விற்பனை செய்கிறோம். ராஜபாளையத்தில் 20 ஏக்கர் மாந்தோப்பு எங்களிடம் உள்ளது. அதில் தினம் பழுக்கும் மாம்பழங்களை மட்டும் பறித்து சென்னைக்கு கொண்டு வந்து பொது மக்களுக்கு மட்டும் விற்பனை செய்கிறோம். வியாபாரிகளுக்கு கொடுப்பதில்லை.

மரத்தில் இருந்து பழுத்த பழங்களை பறிக்கும்போது அது 15 நாள் வரை தாங்கும். எனவே பொதுமக்கள் நலனில் அக்கறை இருக்கும். வியாபாரிகள் இயற்கையாக பழுக்க வைத்த பழங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...