Tuesday, November 27, 2012

உங்களுக்காக வைக்கப்படும் அந்த கடைசீத் தொழுகையைக்கூட சுன்னத்தான முறையில் தொழ வைக்கப்படுவதை நீங்கள் விரும்பவில்லையா?

உங்களுக்காக வைக்கப்படும் அந்த கடைசீத் தொழுகையைக்கூட சுன்னத்தான முறையில் தொழ வைக்கப்படுவதை நீங்கள் விரும்பவில்லையா?

தமிழகத்திலுள்ள ஹனஃபீ மத்ஹபை பின்பற்றும் ஆலிம்களுக்கு ஒரு வேண்டுகோள். மாபெரும் அறிஞர் இமாம் அபூ ஹனீஃபா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களுக்கு நீங்கள் ஏன் மதிப்பளிக்க மறுக்கிறீர்கள்? மறுமையில் அவர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதில் அப்படியென்ன ஆசை உங்களுக்கு?!

இறையச்சத்துடன் அவர்கள் சொல்லிவிட்டுச் சென்ற மிக முக்கியமான ஒரு விஷயத்தை ஏன் அலட்சியப்படுத்துகிறீர்கள்.? (பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல்லையே அலட்சியப்படுத்தக்கூடியவர்கள் தானே நீங்கள் என்பது ஒருபுறமிருக்க...) "எமது அறிவுக்கு எட்டியவரை சட்டங்களை வகுத்துத் தந்திருக்கின்றேன். இதற்கு மாற்றமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸை நீங்கள் காணும்பட்சத்தில் என்னுடைய சட்டத்தை பின்பற்றுவது ஹராம்" என்று அவர்கள் எச்சரித்துள்ளது ஏன் உங்கள் காதுகளில் விழவில்லை.

ஜனாஸாத் தொழுகையின்போது முதல் தக்பீருக்குப்பின் சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதுவதுதான் நபிவழி (ஆதாரம் : முஸ்லிம்) என்றிருக்கும்போது அதை புறக்கணித்துவிட்டு ஃதனாவை ஓதும் பழக்கத்தை பின்பற்றி வருவது நிச்சயமக இமாம் அபூ ஹனீஃபா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கருத்துக்கு மாற்றமானதே என்பதை ஏன் உணர மறுக்கிறீர்கள். தன்னுடைய சொல்லுக்கு மாற்றமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல் கிடைக்குமானால் அதைத்தான் பின்பற்ற வேண்டும், என்னை அவ்விஷயத்தில் பின்பற்றுவது கூடவே கூடாது என்று அவர்கள் எச்சரித்துச்சொன்ன பிறகும்கூட பிடிவாதம் பிடிக்கின்றீர்களே! சிந்திக்கவே மாட்டீர்களா?!

மரணித்த பிறகு ஒரு மனிதனுக்கு தொழ வைக்கப்படும் அந்த கடைசீத் தொழுகையைக்கூட - "ஜனாஸா தொழுகையை"க் கூட நபி வழியில் தொழ மறுக்கின்றீர்களே இது எவ்வளவு அப்பட்டமான குற்றம். அதுவும் "சூஅத்துல் ஃபாத்திஹாவை ஓதப்படாமல் தொழும் எந்த தொழுகையும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை எனும் நபிமொழியையும் அலட்சியப்படுத்துகிறீர்களே! சரியானது தானா?

ஜனாஸாத்தொழுகை ஒரு தொழுகையல்ல அது ஒரு துஆ என்று சிலர் வாதம் புரிவதில் உண்மையில்லை. தொழுகையே துஆ எனும்பொழுது எதற்காக தொழுது முடித்தவுடன் மறுபடியும் பல துஆக்கள்?!

ஆக ஜனாஸாத் தொழுகையை ஒரு துஆ என்று சொல்வதாக இருந்தாலும் உண்மையில் உங்கள் மனது அதை ஒரு தொழுகையாகவே எண்ணுகிறது என்பதே உண்மை. (எங்கே உங்கள் மனசாட்சியை தொட்டுச்சொல்லுங்கள்.) அதனால் தான் தொழுது முடித்த உடனே துஆ ஓதப்படுகிறது. எதற்காக உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்கிறீர்கள்?!

ஹனஃபீ மத்ஹபைப் பின்பற்றக்கூடிய சகோதரர்களே!

உங்களுக்காக வைக்கப்படும் கடைசீ தொழுகை; குர்ஆனின் திரும்பத் திரும்ப ஓதப்படும் அற்புதமான "சூரத்துல் ஃபாதிஹா" வை இழந்து தொழ வைக்கப்படுவதில் உங்களுக்கு உடன்பாடுதானா?

உங்களுக்காக வைக்கப்படும் கடைசீ தொழுகையில் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டுதல் புறக்கணிக்கப்படுவதை விரும்புகிறீர்களா?

அதற்குப்பிறகு உங்களுக்கென்று எவரும் எந்த தொழுகையும் தொழப்போவதில்லை. சிந்தியுங்கள். சிந்தியுங்கள். சிந்தியுங்கள். ஒருமுறையல்ல ஓராயிரம் முறை சிந்தியுங்கள்.

தேவையற்ற விஷயங்களுக்கெல்லாம் ஆலிம்களை வளைத்துப்போடும் நிர்வாகத்தில் இருப்பவர்களே! இந்த ஒரு விஷயத்திலாவது அல்லாஹ்வின் ரஸூலின் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) வார்த்தைக்கு மதிப்பளியுங்கள்.. இல்லையேல் மறுமையில் அந்த நபியின் ஷஃபாஅத்தை எங்ஙனம் பெறுவீர்கள்?

பிடிவாதத்தை விட்டொழியுங்கள். உண்மையின் பக்கம் வாருங்கள். அல்லாஹ் நல்லருள் புரிவான்.

No comments:

Post a Comment

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...