Thursday, October 18, 2012

நற்குணம்

 > உண்மை முஸ்லிம் நற்குணமுடையவராகவும், மென்மையாக உரையாடுபவராகவும்
> இருப்பார். இது விஷயத்தில் நபி ஸல் அவர்களின் வழிகாட்டுதல் அவருக்கு
> உண்டு. நபி ஸல் அவர்களின் பணிவிடையாளரான அனஸ் (ரழி) அவர்கள் கூறியதுபோல,
> நபி ஸல் அவர்கள் மனிதர்களில் மிகவும் நற்குணம் உடையவர்களாகத்
> திகழ்ந்தார்கள். அனஸ் (ரழி) அவர்கள் இதை மிகையாகக் கூறவில்லை. நபி ஸல்
> அவரகளின்பால் அவர்கள் கொண்டிருந்த அன்பு அவர்களை மிகைப்படுத்திக் கூறத்
> தூண்டவுமில்லை. நபி ஸல் அவர்களிடம் வேறு எவரும் காணாத விஷயங்களை
> கண்டார்கள். நபி ஸல் அவர்களின் நற்குணத்தின் ஒரு பகுதியை பின்வருமாறு
> சுட்டிக்காட்டினார்கள்.
>
> அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ""நான் நபி ஸல் அவர்களுக்கு பத்து
> ஆண்டுகள் பணிவிடை செய்தேன். அவர்கள் என்னிடம் ஒருபோதும் "சீ' என்று
> கூறியதில்லை. நான் செய்த எந்த காரியத்துக்கும் ஏன் செய்தாய் என்றோ நான்
> செய்யாத எந்த காரியத்திற்கும் ஏன் அதைச் செய்யவில்லை? என்றோ
> கூறியதில்லை.'' (ஸஹீஹுல் புகாரி)
>
> நபி ஸல் அவர்கள் ஆபாசமாகவோ அருவருப்பாகவோ பேசியதே இல்லை. நபி ஸல்
> அவர்கள் கூறினார்கள்: "உங்களில் சிறந்தவர் யாரெனில் உங்களில்
> நற்குணத்தால் அழகானவரே.'' (ஸஹீஹுல் புகாரி)
>
> நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: அசிங்கமான சொல், செயல்கள் இஸ்லாமில்
> உள்ளவை அல்ல. மனிதர்களில் அழகானவர் யாரெனில் அவர்களில் நற்குணத்தால்
> அழகானவரே. (முஸ்னத் அஹ்மத்)
>
> மேலும் கூறினார்கள்: "உங்களில் எனக்கு மிகவும் நேசத்திற்குரியவரும்,
> மறுமையில் சபையால் எனக்கு மிகவும் நெருக்கமானவரும் யாரெனில் உங்களில்
> குணத்தால் மிக அழகானவரே. உங்களில் எனக்கு மிகவும் கோபத்திற்குரியவர்,
> மறுமை நாளில் என்னிடமிருந்து மிகவும் தூரமானவர் யாரெனில் அதிகமாகப்
> பேசுபவர், அடுக்குமொழியில் பேச முயற்சிப்பவர், அகந்தை உடையவர்
> ஆகியோரே.'' (ஸுனனுத் திர்மிதி)
>
> அல்லாஹ்வின் அருள் பெற்ற நபித்தோழர்கள் நபி ஸல் அவர்களிடமிருந்து
> நற்பண்பு மிக்க இவ்வழிகாட்டுதலை செவியேற்றார்கள். அவர்கள் தங்களது
> கண்களால் நபி ஸல் அவர்கள் மக்களிடம் வெளிப்படுத்திய பண்புகளைக்
> கண்டார்கள். ஆகவே அவர்களின் பொன்மொழியை முழுமையாக ஏற்று
> செயல்படுத்தினார்கள். இதனால் உலகில் எந்த சமுதாயத்திலும் காணமுடியாத
> மகத்தான முன்னோடிகளாகத் திகழ்ந்தார்கள்.
>
> அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "நபி ஸல் அவர்கள் கருணையாளராக
> இருந்தார்கள். அவர்களிடம் எவர் வந்தாலும் அவருக்கு வாக்களித்து
> தன்னிடமிருப்பதைக் கொடுத்து உதவுவார்கள். ஒருமுறை ஜமாஅத் தொழுகைக்காக
> இகாமத் சொல்லப்பட்டது. அப்போது ஒரு கிராமவாசி நபி ஸல் அவர்களிடம் வந்து
> அவர்களின் ஆடையைப் பிடித்துக் கொண்டார். அவர் "என் தேவைகளில் சில
> நிறைவேறவில்லை; (இப்போது செய்யவில்லையெனில்) அதை நான் மறந்து விடுவேனோ
> என அஞ்சுகிறேன்'' என்றார். நபி ஸல் அவர்கள் அம்மனிதருடன் சென்று அவரது
> வேலையை முடித்து வந்தபின் தொழவைத்தார்கள்.'' (அல் அதபுல் முஃப்ரத்)
>
> நபி ஸல் அவர்கள் அந்த கிராமவாசியின் கோரிக்கைக்கு செவி சாய்த்து அதை
> நிறைவேற்றுவதை தொழுகைக்கான இகாமத்தின் சமயத்தில் கூட சிரமமாகக்
> கருதவில்லை. தொழுகைக்கு முன் தனது தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்கு
> ஆடையைப் பிடித்து இழுத்த கிராமவாசியின் செயல் அவர்களது இதயத்தை
> சங்கடத்தில் ஆழ்த்தவில்லை. ஏனெனில், அவர்கள் நற்குணத்தின் சங்கமமாக
> இருந்தார்கள். ஒரு முஸ்லிம் தனது சகோதரனிடம் எவ்வாறு நடந்துகொள்ள
> வேண்டுமென்பதை கற்றுக் கொடுத்தார்கள். இஸ்லாமிய சமூகம் இத்தகைய
> சிறப்புப் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டுமென்ற கருத்தையும்
> உறுதிப்படுத்தினார்கள்.
>
> முஸ்லிமல்லாத ஒருவரிடம் நற்குணங்கள் காணப்பட்டால் அதற்கு சிறந்த வளர்ப்பு
> முறைகளும், உயர் கல்விகளும்தான் காரணமாக இருக்கும். ஆனால் முஸ்லிமிடம்
> காணப்படும் இப்பண்புகளுக்கு முதன்மைக் காரணம் மார்க்கத்தின் போதனைதான்.
> மார்க்கம் இப்பண்புகளை முஸ்லிமின் இயற்கையாகவே மாற்றிவிடுகிறது.
>
> முஸ்லிமின் அந்தஸ்தை உலகில் உயர்த்துவதுடன், மறுமையின் தராசில் நன்மையின்
> தட்டை கனமாக்குகின்றன. மறுமை நாளில் நன்மையின் தராசுத்தட்டை
> கனமாக்குவதில் நற்பண்புகளுக்கு இணையானது வேறெதுவுமில்லை.
>
> நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: "மறுமை நாளில் முஃமினின் தராசுத் தட்டில்
> நற்பண்புகளைவிட கனமானது வேறெதுவுமில்லை. நிச்சயமாக அல்லாஹ் இழி நடத்தை
> உள்ளவனையும் அருவருப்பாகப் பேசுபவனையும் கோபிக்கிறான்.'' (ஸுனனுத்
> திர்மிதி)
>
> நற்குணத்தை, ஈமான் பூரணமடைந்ததற்கான அடையாளமாக இஸ்லாம் கூறுகிறது. நபி
> ஸல் அவர்கள் கூறினார்கள்: "ஈமானால் பரிபூரணமானவர் யாரெனில் அவர்களில்
> குணத்தால் மிக அழகானவரே.'' (ஸுனனுத் திர்மிதி)
>
> நற்குணமுடையவர் அல்லாஹ்வின் அடியார்களில் மிகவும் நேசத்துக்குரியவர்
> என்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது. இதற்கு உஸப்மா இப்னு ஷுரைக் (ரழி)
> அவர்கள் அறிவித்த நபிமொழி சான்றாகும். நாங்கள் நபி ஸல் அவர்களின்
> சமூகத்தில் எங்களுடைய தலைகளில் பறவை அமர்ந்திருப்பது போல (ஆடாமல்
> அசையாமல்) அமர்ந்திருந்தோம். நபி ஸல் அவர்களின் சபையில் எங்களில் எவரும்
> பேசமாட்டார். அப்போது சிலர் வந்து நபி ஸல் அவர்களிடம் "அல்லாஹ்வின்
> அடியார்களில் அல்லாஹ்வுக்கு மிக நேசத்திற்குரியவர் யார்?' என்று
> வினவினர். நபி ஸல் அவர்கள், "அவர்களில் குணத்தால் மிக அழகானவர்'' எனக்
> கூறினார்கள்.
>
> நற்குணமுடையவர் அல்லாஹ்வின் அன்பிற்குரியவராக இருப்பதில் ஆச்சரியம்
> எதுமில்லை. எனெனில் நற்குணம் இஸ்லாமில் மகத்தான விஷயமாகும். நாம் முன்பு
> கண்டதுபோல், இது மறுமை நாளில் அடியானின் தராசுத் தட்டில் வைக்கப்படும்
> மிகக்கனமான அமலாகும். இஸ்லாமின் இரண்டு பெரும் தூண்களான தொழுகை,
> நோன்புக்கு இணையானதாகும்.
>
> நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: "தராசுத் தட்டில் வைக்கப்படுவதில்
> நற்குணத்தைவிட மிகக் கனமான அமல் வேறெதுவுமில்லை. நற்குணம் உடையவரை அவரது
> நற்குணம் தொழுகை, நோன்பால் கிடைக்கும் அந்தஸ்திற்கு
> உயர்த்திவிடுகிறது.'' (ஸுனனுத் திர்மிதி, முஸ்னதுல் பஸ்ஸார்)
>
> மற்றோர் அறிவிப்பில்: "ஒரு அடியான் தனது நற்குணத்தால் பகலெல்லாம்
> நோன்பு நோற்று, இரவெல்லாம் தொழுபவரின் அந்தஸ்தை அடைந்து கொள்வார்''
> என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
>
> தங்களது சொல், செயலால் நபி ஸல் அவர்கள் நற்குணத்தின் முக்கியத்துவத்தை
> தோழர்களிடம் உணர்த்தி, அதன்மூலம் தங்களை அழகுபடுத்திக்கொள்ள
> தூண்டினார்கள்.
>
> நபி ஸல் அவர்கள் "அபூதர்ரே! உமக்கு நான் இரண்டு குணங்களைப் பற்றி
> அறிவிக்கட்டுமா? அவை இரண்டும் செய்வதற்கு மிக இலகுவானவை. மறுமையின்
> தராசுத்தட்டில் எல்லாவற்றையும் விட மிகக் கனமானவை'' என்று வினவினார்கள்.
> அபூதர் (ரழி) "அல்லாஹ்வின் தூதரே! கூறுங்கள்'' என்றார். நபி ஸல் அவர்கள்,
> ""நற்குணத்தையும் நீண்ட மெªனத்தையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்.
> எவனது கைவசம் என் ஆன்மா இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! இந்த இரண்டைப்
> போன்ற வேறு எதனாலும் மனிதகுலம் அழகு பெறவில்லை'' என்று கூறினார்கள்.
> (முஸ்னத் அபூ யஃலா)
>
> மேலும் கூறினார்கள்: "நற்குணம் வளர்ச்சியாகும், துற்குணம் அழிவாகும்,
> உபகாரம் ஆயுளை அதிகப்படுத்தும், தர்மம் தீய மரணத்தைத்
> தடுக்கும்.'' (முஸ்னத் அஹ்மத்)
>
> நபி ஸல் அவர்கள்: "யா அல்லாஹ் எனது தோற்றத்தை நீயே அழகுபடுத்தினாய்.
> எனது குணத்தையும் அழகுபடுத்துவாயாக'' என்ற துஆவை வழமையாகக் கூறி
> வந்தார்கள். (முஸ்னத் அஹ்மத்)
> ....(நபியே!) நிச்சயமாக நீர் மகத்தான நற்குணமுடையவராகவே இருக்கின்றீர்.
> (அல்குர்அன் 68:4)
> அல்லாஹு தஅலா தனது திருமறையில் இவ்வாறு கூறியிருந்த போதும் நபி ஸல்
> அவர்கள் தனது குணத்தை அழகுபடுத்துமாறு துஆ செய்ததிலிருந்து நற்குணத்தின்
> முக்கியத்துவத்தையும், முஸ்லிம்கள் அதை மென்மேலும் வளர்த்துக்கொள்ள
> வேண்டுமென்பதையும் புரிந்து கொள்ளலாம். நற்குணம் என்பது முழுமையானதொரு
> வார்த்தையாகும். அதனுள் மனிதனை பரிசுத்தப்படுத்தும் குணங்களான வெட்கம்,
> விவேகம், மென்மை, மன்னிப்பு, தர்மம், உண்மை, நேர்மை, பிறர்நலம் நாடுவது,
> நன்மையில் உறுதி, உளத்தூய்மை, முகமலர்ச்சி போன்ற பல நற்பண்புகள்
> உள்ளடங்கியுள்ளன.
>
> இஸ்லாமின் சமூகக் கண்ணோட்டத்தைப் பற்றி ஆராய்பவர் அச்சமூகத்தை
> மேன்மைப்படுத்தும்படியான நற்பண்புகளை வலியுறுத்தும் ஏராளமான சான்றுகளை
> கண்டுகொள்வார். சமூகத்தில் முஸ்லிம் தனித்தன்மை பெற்று விளங்குவதற்கு
> இஸ்லாம் மிகுந்த முன்னுரிமை அளிக்கிறது. பொதுப்படையானதாக இல்லாமல்
> சமுதாயத்தின் ஒவ்வொரு நபர்களின் ஒவ்வொரு செயலிலும் அப்பண்புகளை இஸ்லாம்
> வளரச் செய்திருக்கிறது. சமூகம் அனைத்தையும் நற்பண்புகளால் அலங்கரித்த
> சாதனையை இஸ்லாமை தவிர வேறெந்த கொள்கையாலும் சாதிக்கமுடியவில்லை.
>
> இறையச்சமுள்ள முஸ்லிம் சமூகத்தில் தனித்தன்மை பெற்றுத் திகழ்வதற்காக,
> இஸ்லாம் எற்படுத்தியுள்ள மார்க்க நெறிகளைப் பின்பற்றுவது சிரமமானதல்ல
> என்பதை அதன் சான்றுகளை ஆராய்பவர்கள் அறிந்துகொள்வர்.
>
> இறைவன் எற்படுத்திய வரம்புக்குள் நின்று, அவனது விலக்கலைத் தவிர்த்து,
> மார்க்க நெறிகளை முழுமையாக ஏற்று, முஸ்லிமின் இலக்கணமாகத் திகழ்பவரின்
> ஒவ்வொரு செயலிலும் நற்பண்புகள் பிரகாசிக்கின்றன. முஸ்லிம்
> மோசடிக்காரராக, வஞ்சகராக, எமாற்றுபவராக, பொறாமைக்காரராக இல்லாமல்
> அனைத்து மக்களிடமும் நற்குணத்துடன் நடந்துகொள்வார்.

No comments:

Post a Comment

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...